வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.10.11

தாத்தா வேலைக்கு செல்கிறார்

                                                                              
மாலை மங்கிய நேரம் .அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய போது, காவலாளி இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது இன்னும் உள்ளே சென்று நிறுத்தவேண்டும்  என்று எனது அவசரம் புரியாமல் கூறினான் .வசதியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கிடையில் எனது வண்டியை சொருகினேன் .மருத்துவமனைக்கே உண்டான நெடி மூக்கில் பரவியது .வரவேற்பறையில் ஒரு வெள்ளை சுடிதார் பெண்மணி மிக தீவிரமாக எதையோ எழுதிகொண்டிருந்தாள்.அவளை அணுகியபோது அவளே நிமிர்ந்தாள்.பெத்தம்மாள் என்ற பெயரில் யாரைவுது அனுமதித்திருக்கிறீர்களா என விசாரித்தேன் .அவள் 302  என்று கூறினாள் நோட்டில் எழுதிக்கொண்டே .விடியலிலே ஆசைமாமா போன் செய்திருந்தார்.அம்மாச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறோமென்றுஅம்மா அப்போதே  பதறியடித்தாள் உடனே ராஜபாளையம் செல்ல வேண்டுமென்று .அப்பா என்னையும் கூட போக சொன்னார் ,நான் மதியத்திற்குள் ஒரு முக்கியாமான வேலையை முடிக்க வேண்டும் நீங்கள் முன்னால்  செல்லுங்கள் நான் சாயிந்தரத்திற்க்குள் வந்து விடுகிறேனென்று அம்மாவை மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏற்றிவிட்டேன் .மதியம் மூன்றுமணிக்கு மேல்  எனது வண்டியிலே ராஜபாளையம் சென்று விட்டேன் .ராஜபாளையத்தை அடைந்தபோது ஐந்தரை மணி

அது தனியார் மருத்துவமனையாகயிருந்தாலும் கூட்டமாக இருந்தது .நோய்களுக்காக மருந்து கண்டுபிடித்தது போய் மருந்துகளுக்காகவே நோயாளிகள் உருவாக்கபடுகிறார்களோ என்னவோ.என்னுடைய பதினைந்தாவது வயது வரை ராஜபாளையத்தில் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் ,பெத்தம்மாள் என் அம்மாவின் அம்மா .எனக்கு அம்மாச்சி , அழைப்பது அம்மாயி .அந்த வார்டில் கடைசியாக இருந்த அறையைநோக்கி நடந்து கொண்டிருந்தேன் ,நான் சரியாக உள்ளே நுழைந்தபொழுது பரமேஸ்வரி அத்தை வெளியில் வந்தார் ,என்னை பார்த்து விட்டு விலகி நின்றார். அறைமுழுவதும் மௌனம் சூழ்ந்திருந்தது ,சுவற்றோமாக இடபட்டிருந்த  கட்டிலில் அம்மாயியை கிடத்திவைத்திருந்தார்கள் .அம்மா கட்டிலின் ஓரமாக உட்கார்ந்திருந்தாள்,அம்மாயி சலனமில்லாமல் இருந்தாள்     அவள் முகம்  நுப்பத்தைந்து வருட உழைப்பின் ரேகைகளாக உருமாறியிருந்தது.சற்று தள்ளி ஒரு பெஞ்சில் தாத்தா கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார் .எல்லாவற்றிக்கும் தாத்தாதான்  காரணம் .என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து அம்மாயி தான் என்னை வளர்த்தாள்.அவ்வப்போது அம்மா வந்து பார்த்து விட்டு செல்வாள் .வீட்டில் மிகவும் பண  கஷ்டம் என்னை படிக்க வைக்க முடியாது ,தம்பி கை குழந்தை .ஒரு முறை அம்மாயி வீட்டிற்கு  வந்தபோது என்னையும் கூடவே கூட்டி வந்து விட்டார் .ராசு மாமாவும் நானும் வெளியில் வந்தோம் .'ஒழச்ச ஓடா தேஞ்ச ஒடம்பு .தீடீர்னு கையி காலு இலுதுக்கிச்சு பக்கவாதம்னு சொல்றாங்க' .அப்படியே திரும்பி பார்த்தார் தாத்தா மூக்கு பொடியை கடைவாயிக்குள் திணித்து கொண்டிருந்தார் .எல்லாம் இந்த கெழட்டு பயலாலதான் என்றார் மாமா .

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே தாத்தா வேலைக்கே சென்று பார்த்ததே இல்லை இரண்டு ஆண்பிள்ளைகள் வளர்த்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தது எல்லாம் அம்மாயி தான் .அதனால் என்னையும் வளர்த்தது அவளுக்கு மிக பெரிய விஷயம் இல்லை .அப்போதுதான் ஆசை மாமாவிற்கு கல்யாணம் ஆன சமயம்.ராசுமாமவிற்கு கல்யாணம் ஆகவில்லை .ஆசை மாமாவை பக்கத்து தெருவில் வீடெடுத்து குடிவைத்தாள்.நான், அம்மாயி ,ராசு மாமா ,தாத்தா என ஒரு வீட்டில் இருந்தோம் .ராசு மாமா தச்சு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் .அவர் என்னை பெரிதாக ஒன்றும் கண்டுகொண்டதில்லை .காலையில் சென்றால் இரவுதான் வருவார் .அம்மாயி ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலையில் ஸ்பின்னராக வேலைபார்த்தார் .அந்த பஞ்சாலையில் பஞ்சு பொருக்குபராக சேர்ந்து பின்னர் வேலையை கற்று கொண்டு ஸ்பின்னராக உயர்ந்தாள்  அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை காப்பாற்றிருக்கிறாள் .இது போக தினமும் தாத்தாவிற்கு தண்ணி அடிப்பதற்கு காசு குடுப்பாள் .அம்மாயி சமைத்து வைத்து விட்டு சென்று விடுவாள் .சாயிந்தரம் ஏழு மனியாவதுஆகும் வருவதற்கு .நான் வெளியில் விளையாட சென்று விடுவேன் .அந்த தெரு பையன்களுடன் சில்லாக்கு விளையாண்டு கொண்டிருக்குபோது பின்னாலே முருங்க குச்சியால் அடிப்பார் .'தொரைய வந்து கூட்டிட்டு போனாதான் சாப்பிடுவீங்களோ நாயி நாயி ' என்று அடித்து இழுத்து செல்வார் .'அப்படிதான் போடு குண்டிலேயே போடு செத்த பொடி மட்ட வாங்கிட்டு வாடான்னா நகலமாட்டேன்ட்டானே  ஒம்ம பேராண்டி '  என்பார் அந்த தெருவின் முக்கு வீட்டு நாயுடு தாத்தா .  சிலசமயம்  நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுபோது 'என்னது இது ரசமா என்று அம்மாயி தலையில் ஊற்றிவிடுவார் .எனக்கு நன்றாக இருந்த ரசம் தாத்தாவிற்கு எப்படி நன்றாக இல்லாமல் போனது என்று நான் யோசிப்பேன் .சில சமயம் நகைச்சுவையாக  ஏதாவது சொல்வார் .'இங்கேரு உன் அம்மாயிவச்ச  தேங்க சட்னி எங்கிட்டோ ஓடுது பாரு .புடி புடி' என்பார்

சிறுவயதில் அம்மாயி கூறிய கதைகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது .குட்டையன் கதை ,காக்கா குருவி கதை , குண்டி மறந்தவன் கதை .என நிறைய கதைகள் கூறுவாள் .தினமும் இரவு தூங்கும் போது கதை கூறுவாள் .அம்மாயி குண்டி மறந்தவன் கதை சொல்லு என்பேன் . சே அது ஆய் கதை அது வேணாம் உனக்கு குட்டையன் கதை சொல்றேன் என்பாள் .இல்ல எனக்கு அந்த கதை வேண்டாம் என்று அடம்பிடிப்பேன் .சரி இந்த ஒரு தடவதான் என்று கூறிவிட்டு அந்த கதையை கூறுவாள் .ஒரு ஊருல ஒருத்தன் இருந்தானாம் அவன் தெனமும் கொல்லைக்கு சொம்புநெறைய தண்ணி  எடுத்துட்டு போவானாம் .அவன் இருந்து' முடுச்சிட்டு கால் கழுவதற்காக சொம்பு எடுக்க கைய கொண்டு போறப்ப ஒரு காக்கா வந்து சொம்ப தட்டி விட்டுடுமாம் .தண்ணியெல்லாம் கொட்டி போயிடுமாம் .தெனமும் அந்த காக்கா இப்படித்தான் பண்ணுமாம் .இவனுக்கு அந்த காக்காமேல ரொம்ப கோபம் .என்னடா தெனமும் இந்த காக்கா  இப்படியே பண்ணுதே இதுக்கு எதாவுது வழி பண்ணனுமே யோசிச்சானாம் .அதே போல அன்னைக்கு சொம்பு நெறைய தண்ணி எடுத்துகிட்டு போனானாம் அதே போல காக்காவும் மரத்து மேல ஒகாந்திருக்கு இவனையே பாத்திட்டிருக்கு  .நேர அவன் வழக்கமா போற மரத்து பின்னால போயி  உக்காரதுக்கு முன்னாடியே கழுவிட்டு உக்காந்தானாம் அப்படியே காக்கைய பாத்து இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ என்றானாம் .என்று கூறிவிட்டு சிரிப்பாள் .எனக்கு அப்போது அந்த கதை புரியாவிட்டாலும் அம்மாயி சிரித்ததற்க்காகவே நானும் சிரிப்பேன்

சற்று பெரியவனான பிறகு ஏன் அம்மாயி உனக்கும் தாத்தாவுக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு என்பேன் .அதையேன் கேக்குற ,கல்யாணத்துக்கு போனவள புடுச்சு உன் தாத்தனுக்கு கட்டி வச்சிட்டாங்க .கல்யாணத்தன்னைக்கு பார்த்திருக்காங்க அந்த பொம்பளைக்கு நொட்டாங்கையில ஒத்த வெரலு இல்லையாம் .உங்க தாத்தன் நான் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சண்ட போட்டோடன .என்னைய புடுச்சு கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க .அப்பமதுரை ஆரப்பாளையத்துல  உங்க தாத்தாவும் மளிகை கடை வச்சு நடத்திட்டு வந்தாரு .அதுக்கப்பறம் அதலாம் வித்துபுட்டு நான் சினிமா படம் எடுக்க போரன்னேனு எவன் கிட்டையோ மொத்த காசையும் ஏமாந்தாறு .அதுக்கடுத்து இருக்குற வீட்டையெல்லாம் வித்து சீமைக்கு போயி  ஜவுளி வியாபாரம்  பண்றேன்னு அதுலயும் ஏமாந்தாறு .சாப்பாடுக்கே கஷ்டம் ஆயிடுச்சு சரி இதுக்கு மேல இங்கிருக்க வேண்டாம்னு கிருஷ்ணன் கோவிலுக்கே வந்துட்டோம் அப்பலாம் உங்க அம்மாவும் சித்திலாம் வயசுக்கு கூட வரல .எங்க பாத்தாலும் ஒரே பஞ்சம் பட்டினி .ஒரு தடவ அந்த பக்கம் போன ரவை லாரி கவுந்துடுச்சு .மண்ணுல மூட்ட மூட்டையா சரிஞ்சு கெடக்கு
 ஊருக்காரவுங்க எல்லாம் ரவை அள்ளிட்டு வந்து ஒரு பெரிய அண்டாவுல தண்ணியை ஊத்தி அதுல ரவையை  கொட்டி .மன்னுலாம் தண்ணிக்குள  எறங்குனவுடனே ரவையை எடுத்து காய வச்சு வறுத்து மூணுநாளைக்கு  சாப்பிட்டோம் .அப்பதான் ராஜபாளயத்துல பஞ்சாலைக்கு ஆள் எடுக்குறாங்க கேள்வி பட்டு நானும் உங்க தாத்தனும் போனம் .ஆனா உங்க தாத்தேன் கொஞ்சநாள்லே  வேலையே விட்டு வந்துட்டாரு .அதுக்கடுத்து இன்னம் வரைக்கும் உங்க ஒத்த வேலைக்கு போனதில்லை என்பாள்

அம்மாயி நான் கல்யாணம் பண்ணேனா உனைய மாதிரி ஒரு பொன்னா பாத்து கல்யாணம் பண்ணிக்குவேன்.வேலைக்கே போக வேனாம்பாரு ,அம்மாயி புன்னகைப்பாள்

அம்மாயி இந்தியா முழுவதும் சுற்றிபார்த்திருக்கிறாள் .அவள் வேலை பார்த்த பஞ்சாலை நிறுவனம் அங்கு வேலைபாத்த அனைவரையும் ஒருமுறை  சுற்றுலா அழைத்துசென்றிருக்கிறது.நான் பத்தாவதுக்கு மேல் மதுரை வந்துவிட்டேன் .ஆனாலும் அவ்வப்போது ராஜபாளையம் சென்றுவிடுவேன் .அம்மாயி வைக்கும் மீன் குழம்பிற்க்காகவே ஞாயிற்றுக்கிழமையாக பார்த்து செல்வேன் 'மாப்புள வா வீட்டுக்கு போவம் ஆசுபித்திரில யாராச்சும் ஒருத்தர் தான் இருக்கமுடியுமாம் ,அம்மா இங்க இருக்காம் 'என்றார் ராசு மாமா .அம்மாவை பார்த்தேன் இருந்து விட்டு  காலையில் செல்  என்றார் .அதற்கு பின் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நான் மதுரை வந்து விட்டேன் .நடுவில் இரண்டு முறை ராஜபாளையம் சென்று வந்தேன் அம்மா அங்கேயேதான் இருந்தார் .இரண்டு  அத்தைமார்களும் சாப்பாடு மட்டுதான் கொண்டுவந்து தருகிறார்களாம் .அம்மாயியின் கழிவுகளை பார்த்து மூக்கை பிடித்து கொள்கிறார்களாம்.அதற்காகவே அம்மா இருக்கவேண்டியதாகிவிட்டது     .அம்மாயியை வீட்டு அழைத்து வந்து விட்டதாக அறிந்தேன் .அம்மாயி நன்றாக கண்முழித்து பார்க்கிறாளாம் .எப்போது ஒன்றிரண்டு வார்த்தை பேசுகிறாளாம் .அம்மா போனில் கூறினார் .என்னை ஒரு முறை பார்க்கவேண்டும் என்று கூறினாளாம் .போக வேண்டும் .தாத்தா என்ன செய்கிறார் என்று விசாரித்தேன் .சில நாட்களுக்கு முன்னால் மாமாவிடம் பணம் கேட்டிருக்கிறார் .மருமகளுக பொங்கி போடுறத தின்னுபுட்டு வீட்டுல கெடக்குரதுன' கெட .தாத்தா அம்மாயியின் பென்சன் காசை கேட்டிருக்கிறார் .அம்மாயிக்கு அந்த பஞ்சாலைக்கே பிரத்யோகமாக செயல்படும் பாங்கி லிருந்து மாசம் மாசம் பென்சன் என்ற பெயரில் கொஞ்சம் பணம் வரும் .அதற்க்கு மாமாக்கள் இருவரும் அந்த காச வச்சுதான் உன் பொண்டாட்டிக்கு வைத்தியம் பார்த்தது .இன்னும் அதுக்கு மேலதான் செலவாகுது .என்று கூறி மரியாதை இல்லாமல் பேசிருக்கிறார்கள் .தாத்தா கெட்டவார்த்தையாக திட்டி விட்டு வந்திருக்கிறார் .அப்போது எடுத்த முடிவுதான் வேலைக்கு செல்வது என்று .

4 கருத்துகள்:

test said...

மணியிடமிருந்து மீண்டுமொரு மண்வாசனைப் பதிவு! அருமை!

MANO நாஞ்சில் மனோ said...

ஹே அசத்தல் பதிவு....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா..... நம்ம மணியா இப்படி எழுதி இருக்கறது..... என்னமோ இருந்திருக்குய்யா இவருக்குள்ளயும்......!

Rathnavel Natarajan said...

அருமையான கதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena