வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

24.8.10

காவல் துறையா இல்லை களங்கத்துறையா ?

மாற்றுத்திறன் படைத்த சாதனை வீரர்களை வருத்திய போலீசார்சென்னை :அரசு வேலை கேட்டு உண்ணாவிரதம் துவங்கிய மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களை, மனிதாபிமானமே இல்லாமல் போலீசார், குற்றவாளிகள் போல் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் சென்னையில் நடந்தது.

"ஊனம் உடலில்தான்; எங்கள் மனதில் இல்லை' என்று தன்னம்பிக்கையோடு, மாற்றுத் திறன் படைத்தோர் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையிலும் சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்தோர் ஏராளம்.தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்த மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்கள், தமிழகத்தில்  நூற்றுக்கும் மேற்பட்டோர்  உள்ளனர். இவர்கள், தங்களுக்கு அரசு நிரந்தர வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால், மாற்றுத் திறன் படைத்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள், நேற்று காலை சென்னை அண்ணா சதுக்கம் அருகே, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர்.

இதையறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் மாற்றுத் திறனாளிகளிடம் பேசினர்."மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் வந்து பேசினால், எங்கள் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு, கலைந்து செல்கிறோம்' என வீரர்கள் கூறினர். அதை காதில் வாங்காத போலீசார், "உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள்; இல்லாவிட்டால் அவ்வளவுதான்...' என எச்சரித்தனர்.திடீரென அவர்கள் வைத்திருந்த உண்ணாவிரத பேனரை பறித்து வீசினர். தடுத்த விளையாட்டு வீரர்களை பிடித்து கீழே தள்ளினர். துணையாக விளங்கும் "வீல் சேர்', கைப்பிடிகளை எல்லாம் பறித்தனர்.போராட்டத்தைக் கைவிட மறுத்த, வீரர்களை குற்றவாளிகளைப் போல் குண்டுக் கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்துச் சென்றும் வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற செயல், தன்னம்பிக்கையோடு சாதிக்கும் வீரர்களை வெறுப்படைய வைத்தது.

வீரர்கள் கூறும்போது, "சாதிப்பதற்காக பிற நாட்டு வீரர்களை போராடி ஜெயித்தோம். இன்று எங்கள் உரிமைக்காக போராடி, நம் போலீசாரிடம் ஜெயிக்க முடியலையே...' என புலம்பினர். போலீசாரின் செயலைப் பார்த்த பொதுமக்கள், "மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமைச்சகத்தை துவக்கிய முதல்வர், பல்வேறு துறைகளிலும் வேலை அளித்து வருகிறார். ஆனால், போலீசார் மனிதாபிமானமே இல்லாமல், கொடூரமாக நடந்து கொள்கிறார்களே' என திட்டித் தீர்த்தனர்.

1 கருத்துகள்:

ஜோதிஜி திருப்பூர் said...

இன்று தான் உங்கள் பதிவை தொடக்கம் முதல் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு படித்துக் கொண்டே வருகின்றேன்.

ஜாலி கிண்டல் நக்கல் அக்கறை ஆற்றாமை எல்லாமே கலந்து கட்டி வருகின்றது.

வலைதள ஒழுங்கமைப்பு மற்றும் வடிவமைப்பு குறித்து அக்கறை செலுத்தினால் இன்னமும் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

பெரும்பாலும் நிற எழுத்துக்களைத்தான் அதிகம் பயன்படுத்துறீங்க. வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறம் தான் சரியாக இருக்கும்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena