வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

30.8.10

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்

 தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
ஆனால், இந்த வழக்கை அதிமுக அரசு இழுத்தடித்தது. வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை காக்க, பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சி ஈடுபட்டது.மேலும் வழக்கை நடத்த போலீஸாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் 28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன் , மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena