தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்துள்ள தமிழக அரசு, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தியதோடு, அந்த சம்பளத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இதே போல, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதும், எந்த சங்கமும் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த, சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் ஏதும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. எனினும், முதல்வர் கருணாநிதியாக முன்வந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 35 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வந்த ஊழியர்கள், இனி 45 சதவீதம் அகவிலைப்படியாக பெறுவர். இதனால், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்கும். உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி, ஜூலை 1ம் தேதியில் இருந்து நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும். இந்த உயர்வு, பகுதி நேர ஊழியர்களுக்கு பொருந்தாது. "அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு 2,190 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்' என, அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிப்பூதியம், நிலையான ஊதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை பெறுவோருக்கும் ஜூலை 1ம் தேதியில் இருந்து சிறப்புப் படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 600 ரூபாய்க்குள் சம்பளம் பெறுவோருக்கு மாதம் 20 ரூபாயும், 600 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு 40 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும். இந்த சிறப்பு படி, உள்ளாட்சி பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொருந்தும். முதல்வர் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை பாராட்டி, அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தாங்கள் கேட்காமலேயே அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.
|
2 கருத்துகள்:
ஹ்ம்ம்....
களத்துல குதிச்சாச்சி போல ?!
வாங்க.... கலக்குங்க...
வாழ்த்துக்கள்...
WORD VERIFICATION - ஐ
எடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமே ?!
//தேசாந்திரி-பழமை விரும்பி said...
WORD VERIFICATION - ஐ
எடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமே ?! //
அப்படியே ஓட்டுப் பெட்டியும் வச்சிருங்க.
Post a Comment